1466
கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர் 
நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ 
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு 
மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1467
சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய் 
கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய் 
அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ் 
மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே    
1468
பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே 
சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே 
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன் 
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே    
1469
பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப் 
பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய் 
காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர் 
மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1470
தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய் 
மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ 
காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட 
வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே