1471
களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன் 
உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன் 
குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற 
வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1472
ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந் 
தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற் 
காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும் 
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே    
1473
திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை 
வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம் 
கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி 
மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே    
1474
உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள 
நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே 
படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே 
மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1475
கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப் 
பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே 
சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே 
மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே