1476
நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த 
என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே 
முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே 
மன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே    
1477
நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து 
நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ 
தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய் 
மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1478
அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற 
முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே 
இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம் 
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே    
1479
கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என் 
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில் 
ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின் 
மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே    
1480
ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல் 
ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய் 
சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே 
மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே