1481
பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில் 
துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே 
கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே 
வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1482
காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள் 
ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே 
சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில் 
மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1483
பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார் 
என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே 
மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண் 
மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே    
1484
பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம் 
கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே 
மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே 
மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே    
1485
நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன் 
தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில் 
ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ் 
வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே