1491
மன்றாடும் மாமணியே நின்பொற் பாத 

மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு 
ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான் 

ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன் 
இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன் 

இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன் 
என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும் 

எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே   
1492
சோறு வேண்டினும் துகிலணி முதலாம் 

சுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம் 
வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி 

மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர் 
மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் 

வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன் 
சேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார் 

திகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 திரு உலாப் பேறு 
தலைவி பாங்கியொடு கிளத்தல் திருவொற்றியூர் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1493
சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிதனை 
ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் 

உவகை ஓங்கப் பார்த்தனன்காண் 
வாரார் முலைகண் மலைகளென 

வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் 
ஏரார் குழலாய் என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே   
1494
சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிவரப் 
பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் 

பைம்பொன் வளைகள் அமைத்திலகாண் 
தார்த்தேன் குழலும் சரிந்தனகாண் 

தானை இடையிற் பிரிந்தனகாண் 
ஈர்த்தேன் குழலாய் என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே    
1495
சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் 

தியாகப் பெருமான் திருமாட 
வீதிப் பவனி வரக்கண்டேன் 

மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன் 
போதிற் றெனவும் உணர்ந்திலேன் 

பொன்ன னார்பின் போதுகிலேன் 
ஈதற் புதமே என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே