1506
மாய மொழியார்க் கறிவரியார் 

வண்கை உடையார் மறைமணக்கும் 
தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் 

சுகங்காள் நின்று சொல்லீரோ 
நேய மொழியாள் பந்தாடாள் 

நில்லாள் வாச நீராடாள் 
ஏய மொழியாள் பாலனமும் 

ஏலாள் உம்மை எண்ணிஎன்றே    
1507
ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் 

ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும் 
நல்லார் வல்லார் அவர்முன்போய் 

நாராய் நின்று நவிற்றுதியே 
அல்லார் குழலாள் கண்ணீராம் 

ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார் 
பல்லார் சூழ்ந்து பழிதூற்றப் 

படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே    
1508
ஓவா நிலையார் பொற்சிலையார் 

ஒற்றி நகரார் உண்மைசொலும் 
தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் 

சுகங்காள் நின்று சொல்லீரோ 
பூவார் முடியாள் பூமுடியாள் 

போவாள் வருவாள் பொருந்துகிலாள் 
ஆவா என்பாள் மகளிரொடும் 

ஆடாள் தேடாள் அனம்என்றே    
1509
வட்ட மதிபோல் அழகொழுகும் 

வதன விடங்கர் ஒற்றிதனில் 
நட்ட நவில்வார் அவர்முன்போய் 

நாராய் நின்று நவிற்றாயோ 
கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் 

கடுகி விழுந்த கலைபுனையாள் 
முட்ட விலங்கு முலையினையும் 

மூடாள் மதனை முனிந்தென்றே    
1510
வேலை விடத்தை மிடற்றணிந்த 

வெண்ணீற் றழகர் விண்ணளவும் 
சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் 

சுகங்காள் அவர்முன் சொல்லீரோ 
மாலை மனத்தாள் கற்பகப்பூ 

மாலை தரினும் வாங்குகிலாள் 
காலை அறியாள் பகல்அறியாள் 

கங்குல் அறியாள் கனிந்தென்றே