1516
அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் 

அணியார் ஒற்றி யார்நீல 
கண்டர் அவர்க்கு மாலையிட்ட 

கடனே அன்றி மற்றவரால் 
பண்டம் அறியேன் பலன்அறியேன் 

பரிவோ டணையப் பார்த்தறியேன் 
கொண்டன் மணக்குங் கோதாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே   
1517
பாடல் கமழும் பதம்உடையார் 

பணைசேர் ஒற்றிப் பதிஉடையார் 
வாடல் எனவே மாலையிட்ட 

மாண்பே அன்றி மற்றவரால் 
ஆடல் அளிசூழ் குழலாய்உன் 

ஆணை ஒன்றும் அறியனடி 
கூடல் பெறவே வருந்துகின்றேன் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1518
துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் 

சோதி வெண்ணீற் றழகர்அவர் 
கடிசேர்ந் தென்னை மாலையிட்ட 

கடனே அன்றி மற்றவரால் 
பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் 

பின்னை யாதும் பெற்றறியேன் 
கொடிநேர் இடையாய் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1519
ஒற்றி நகர்வாழ் உத்தமனார் 

உயர்மால் விடையார் உடையார்தாம் 
பற்றி என்னை மாலையிட்ட 

பரிசே அன்றிப் பகைதெரிந்து 
வெற்றி மதனன் வீறடங்க 

மேவி அணைந்தார் அல்லரடி 
குற்றம் அணுவும் செய்தறியேன் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1520
வானும் புவியும் புகழ்ஒற்றி 

வாணர் மலர்க்கை மழுவினொடு 
மானும் உடையார் என்றனக்கு 

மாலை யிட்ட தொன்றல்லால் 
நானும் அவருங் கூடியொரு 

நாளும் கலந்த தில்லையடி 
கோனுந் தியவேற் கண்ணாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே