1521
தெறித்து மணிகள் அலைசிறக்கும் 

திருவாழ் ஒற்றித் தேவர்எனை 
வறித்திங் கெளியேன் வருந்தாமல் 

மாலை யிட்ட நாள்அலது 
மறித்தும் ஒருநாள் வந்தென்னை 

மருவி அணைய நானறியேன் 
குறித்திங் குழன்றேன் மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே   
1522
மின்னோ டொக்கும் வேணியினார் 

விமலர் ஒற்றி வாணர்எனைத் 
தென்னோ டொக்க மாலையிட்டுச் 

சென்றார் பின்பு சேர்ந்தறியார் 
என்னோ டொத்த பெண்களெலாம் 

ஏசி நகைக்க இடருழந்தேன் 
கொன்னோ டொத்த கண்ணாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1523
உடுத்தும் அதளார் ஒற்றியினார் 

உலகம் புகழும் உத்தமனார் 
தொடுத்திங் கெனக்கு மாலையிட்ட 

சுகமே அன்றி என்னுடனே 
படுத்தும் அறியார் எனக்குரிய 

பரிவிற் பொருள்ஓர் எள்ளளவும் 
கொடுத்தும் அறியார் மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே   
1524
உழைஒன் றணிகைத் தலம்உடையார் 

ஒற்றி உடையார் என்றனக்கு 
மழைஒன் றலர்பூ மாலையிட்டார் 

மறித்தும் வந்தார் அல்லரடி 
பிழைஒன் றறியேன் பெண்களெலாம் 

பேசி நகைக்கப் பெற்றேன்காண் 
குழைஒன் றியகண் மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1525
ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் 

என்கண் அனையார் என்தலைவர் 
பீடார் மாலை இட்டதன்றிப் 

பின்னோர் சுகமும் பெற்றறியேன் 
வாடாக் காதற் பெண்களெலாம் 

வலது பேச நின்றனடி 
கோடார் கொங்கை மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே