1536
என்ன கொடுத்தும் கிடைப்பரியார் 

எழிலார் ஒற்றி நாதர்எனைச் 
சின்ன வயதில் மாலையிட்டுச் 

சென்றார் சென்ற திறன்அல்லால் 
இன்னும் மருவ வந்திலர்காண் 

யாதோ அவர்தம் எண்ணமது 
கொன்னுண் வடிவேற் கண்ணாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே   
1537
கரும்பின் இனியார் கண்ணுதலார் 

கடிசேர் ஒற்றிக் காவலனார் 
இரும்பின் மனத்தேன் தனைமாலை 

இட்டார் இட்ட அன்றலது 
திரும்பி ஒருகால் வந்தென்னைச் 

சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி 
குரும்பை அனைய முலையாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே   
1538
தீது தவிர்ப்பார் திருவொற்றித் 

தியாகர் அழியாத் திறத்தர்அவர் 
மாது மகிழ்தி எனஎன்னை 

மாலை யிட்டார் மாலையிட்ட 
போது கண்ட திருமுகத்தைப் 

போற்றி மறித்தும் கண்டறியேன் 
கோது கண்டேன் மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1539
வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார் 

மேலார் ஒற்றி யூரர்என்பால் 
சென்றிக் குளிர்பூ மாலையிட்டார் 

சேர்ந்தார் அல்லர் யான்அவரை 
அன்றிப் பிறரை நாடினனோ 

அம்மா ஒன்றும் அறியனடி 
குன்றிற் றுயர்கொண் டழும்எனது 

குறையை எவர்க்குக் கூறுவனே   
1540
தோளா மணிநேர் வடிவழகர் 

சோலை சூழ்ந்த ஒற்றியினார் 
மாளா நிலையர் என்றனக்கு 

மாலை இட்டார் மருவிலர்காண் 
கேளாய் மாதே என்னிடையே 

கெடுதி இருந்த தெனினும்அதைக் 
கோளார் உரைப்பார் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே