1541
வாடா திருந்தேன் மழைபொழியும் 

மலர்க்கா வனஞ்சூழ் ஒற்றியினார் 
ஏடார் அணிபூ மாலைஎனக் 

கிட்டார் அவர்க்கு மாலையிட்டேன் 
தேடா திருந்தேன் அல்லடியான் 

தேடி அருகிற் சேர்ந்தும்எனைக் 
கூடா திருந்தார் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1542
நலத்திற் சிறந்த ஒற்றிநகர் 

நண்ணும் எனது நாயகனார் 
வலத்திற் சிறந்தார் மாலையிட்டு 

மறித்தும் மருவார் வாராரேல் 
நிலத்திற் சிறந்த உறவினர்கள் 

நிந்தித் தையோ எனைத்தமது 
குலத்திற் சேரார் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே   
1543
ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார் 

என்கண் மணியார் என்கணவர் 
வார்ந்தேன் சடையார் மாலையிட்டும் 

வாழா தலைந்து மனமெலிந்து 
சோர்ந்தேன் பதைத்துத் துயர்க்கடலைச் 

சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன் 
கூர்ந்தேன் குழலாய் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1544
வெள்ளச் சடையார் விடையார்செவ் 

வேலார் நூலார் மேலார்தம் 
உள்ளத் துறைவார் நிறைவார்நல் 

ஒற்றித் தியாகப் பெருமானர் 
வள்ளற் குணத்தார் திருப்பவனி 

வந்தார் என்றார் அம்மொழியை 
விள்ளற் குள்ளே மனம்என்னை 

விட்டங் கவர்முன் சென்றதுவே    
1545
அந்தார் அணியும் செஞ்சடையார் 

அடையார் புரமூன் றவைஅனலின் 
உந்தா நின்ற வெண்ணகையார் 

ஒற்றித் தியாகர் பவனிஇங்கு 
வந்தார் என்றார் அந்தோநான் 

மகிழ்ந்து காண வருமுன்னம் 
மந்தா கினிபோல் மனம்என்னை 

வஞ்சித் தவர்முன் சென்றதுவே