1546
பொன்னேர் சடையார் கீள்உடையார் 

பூவை தனைஓர் புடைஉடையார் 
தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த் 

திகழுந் தியாகர் திருப்பவனி 
இன்னே வந்தார் என்றார்நான் 

எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு 
முன்னே மனம்என் தனைவிடுத்து 

முந்தி அவர்முன் சென்றதுவே    
1547
காண இனியார் என்இரண்டு 

கண்கள் அனையார் கடல்விடத்தை 
ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் 

ஒற்றித் தியாகப் பெருமானார் 
மாண வீதி வருகின்றார் 

என்றார் காண வருமுன்நான் 
நாண எனைவிட் டென்மனந்தான் 

நயந்தங் கவர்முன் சென்றதுவே   
1548
செழுந்தெண் கடற்றெள் அமுதனையார் 

தியாகர் எனும்ஓர் திருப்பெயரார் 
கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார் 

கோலப் பவனி என்றார்நான் 
எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங் 

கேகு முன்னர் எனைவிடுத்தே 
அழுந்து நெஞ்சம் விழுந்துகூத் 

தாடி அவர்முன் சென்றதுவே    
1549
சால மாலும் மேலும்இடந்

தாலும் அறியாத் தழல்உருவார் 
சேலும் புனலும் சூழ்ஒற்றித் 

திகழுந் தியாகப் பெருமானார் 
பாலுந் தேனுங் கலந்ததெனப் 

பவனி வந்தார் என்றனர்யான் 
மேலுங் கேட்கு முன்னமனம் 

விட்டங் கவர்முன் சென்றதுவே    
1550
பின்தாழ் சடையார் தியாகர்எனப் 

பேசும் அருமைப் பெருமானார் 
மன்றார் நடத்தார் ஒற்றிதனில் 

வந்தார் பவனி என்றார்நான் 
நன்றாத் துகிலைத் திருத்துமுனம் 

நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின் 
மென்தார் வாங்க மனம்என்னை 

விட்டங் கவர்முன் சென்றதுவே