1556
கருதற் கரியார் கரியார்முன் 

காணக் கிடையாக் கழலடியார் 
மருதத் துறைவார் திருவொற்றி 

வாண ரின்றென் மனைக்குற்றார் 
தருதற் கென்பா லின்றுவந்தீ 

ரென்றே னதுநீ தானென்றார் 
வருதற் குரியீர் வாருமென்றேன் 

வந்தே னென்று மறைந்தாரே    
1557
கல்லை வளைக்கும் பெருமானார் 

கழிசூ ழொற்றிக் கடிநகரார் 
எல்லை வளைக்குந் தில்லையுள்ளா 

ரென்றன் மனைக்குப் பலிக்குற்றார் 
அல்லை வளைக்குங் குழலன்ன 

மன்பி னுதவா விடிலோபம் 
இல்லை வளைக்கு மென்றார்நா 

னில்லை வளைக்கு மென்றேனே    
1558
வெற்றி யிருந்த மழுப்படையார் 

விடையார் மேரு வில்லுடையார் 
பெற்றி யிருந்த மனத்தர்தமுட் 

பிறங்குந் தியாகப் பெருமானார் 
சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் 
சொல்லி நகைக்க வருகணைந்தார் 
ஒற்றி யிருமென் றுரைத்தேனோ 

னொற்றி யிருந்தே னென்றாரே    
1559
விண்டங் கமரர் துயர்தவிர்க்கும் 

வேற்கை மகனை விரும்பிநின்றோர் 
வண்டங் கிசைக்கும் பொழிலொற்றி 

வதிவா ரென்றன் மனையடைந்தார் 
தண்டங் கழற்கு நிகரானீர் 

தண்டங் கழற்கென் றேன்மொழியாற் 
கண்டங் கறுத்தா யென்றார்நீர் 

கண்டங் கறுத்தீ ரென்றேனே    
1560
விற்கண் டாத நுதன்மடவாள் 

வேட்ட நடன வித்தகனார் 
சொற்கண் டாத புகழொற்றித் 

தூய ரின்றென் மனைபுகுந்தார் 
நிற்கண் டார்கண் மயலடைவா 

ரென்றார் நீர்தா நிகழ்த்தியசொற் 
கற்கண் டாமென் றுரைத்தேனான் 

கற்கண் டாமென் றுரைத்தாரே