1566
தருவார் தருவார் செல்வமுதல் 

தருவார் ஒற்றித் தலம்அமர்வார் 
மருவார் தமது மனமருவார் 

மருவார் கொன்றை மலர்புனைவார் 
திருவார் புயனும் மலரோனும் 

தேடும் தியாகப் பெருமானார் 
வருவார் வருவார் எனநின்று 

வழிபார்த் திருந்தேன் வந்திலரே   
1567
வந்தார் அல்லர் மாதேநீ 

வருந்தேல் என்று மார்பிலங்கும் 
தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் 

தந்தார் அல்லர் தயை உடையார் 
சந்தார் சோலை வளர்ஒற்றித் 

தலத்தார் தியாகப் பெருமானார் 

பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் 
பரிசே தொன்றும் பார்த்திலமே   
1568
இலமே செறித்தார் தாயர்இனி 

என்செய் குவதென் றிருந்தேற்கு 
நலமே தருவார் போல்வந்தென் 

நலமே கொண்டு நழுவினர்காண் 
உலமே அனைய திருத்தோளார் 

ஒற்றித் தியாகப் பெருமானார் 
வலமே வலம்என்அ வலம்அவலம் 

மாதே இனிஎன் வழுத்துவதே    
1569
வழுத்தார் புரத்தை எரித்தார்நல் 

வலத்தார் நடன மலரடியார் 
செழுத்தார் மார்பர் திருஒற்றித் 

திகழுந் தியாகப் பெருமானார் 
கழுத்தார் விடத்தார் தமதழகைக் 

கண்டு கனிந்து பெருங்காமம் 
பழுத்தார் தம்மைக் கலந்திடநற் 

பதத்தார் என்றும் பார்த்திலரே    
1570
பாரா திருந்தார் தமதுமுகம் 

பார்த்து வருந்தும் பாவைதனைச் 
சேரா திருந்தார் திருஒற்றித் 

திகழுந் தியாகப் பெருமானார் 
வாரா திருந்தார் இன்னும்இவள் 

வருத்தங் கேட்டும் மாலைதனைத் 
தாரா திருந்தார் சலமகளைத் 

தாழ்ந்த சடையில் தரித்தாரே