1576
கடுத்தாழ் களத்தார் கரித்தோலார் 

கண்ணால் மதனைக் கரிசெய்தார் 
உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை 

ஒளித்தே தொண்ட னொடும்வழக்குத் 
தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித் 

துதிக்க ஒருகால் அம்பலத்தில் 
எடுத்தார் அன்றோ மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே   
1577
உரப்பார் மிசையில் பூச்சூட 

ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக் 
கரப்பார் மலர்தூ வியமதனைக் 

கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன் 
வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க 

வைத்தார் பலிக்கு மனைதொறும்போய் 
இரப்பார் அன்றோ மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே   
1578
கருதும் அவரை வெளிக்கிழுப்பார் 

காணா தெல்லாங் காட்டிநிற்பார் 
மருதில் உறைவார் ஒற்றிதனில் 

வதிவார் புரத்தை மலைவில்லால் 
பொருது முடிப்பார் போல்நகைப்பார் 

பூவுண் டுறங்கும் புதுவெள்ளை 
எருதில் வருவார் மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே   
1579
ஆக்கம் இல்லார் வறுமையிலார் 

அருவம் இல்லார் உருவமிலார் 
தூக்கம் இல்லார் சுகம்இல்லார் 

துன்பம் இல்லார் தோன்றுமல 
வீக்கம் இல்லார் குடும்பமது 

விருத்தி யாக வேண்டுமெனும் 
ஏக்கம் இல்லார் மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே   
1580
ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார் 

உறவொன் றில்லார் பகைஇல்லார் 
பேரும் இல்லார் எவ்விடத்தும் 

பிறவார் இறவார் பேச்சில்லார் 
நேரும் இல்லார் தாய்தந்தை 

நேயர் தம்மோ டுடன்பிறந்தோர் 
யாரும் இல்லார் மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே