1586
சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர் 

சேருஞ் செல்வத் தியாகர்அவர் 
ஆல்ஆர் களமேல் விளங்குமுகம் 

அழகு ததும்ப வரும்பவனி 
நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை 

நாடிப் புகுந்து கண்டலது 
பால்ஆர் குதலைப் பெண்ணேநான் 

பாயிற் படுக்கை பொருந்தேனே    
1587
செல்வந் துறழும் பொழில்ஒற்றித் 

தெய்வத் தலங்கொள் தியாகர்அவர் 
வில்வந் திகழும் செஞ்சடைமின் 

விழுங்கி விளங்க வரும்பவனி 
சொல்வந் தோங்கக் கண்டுநின்று 

தொழுது துதித்த பின்அலது 
அல்வந் தளகப் பெண்ணேநான் 

அவிழ்ந்த குழலும் முடியேனே    
1588
சேவார் கொடியார் ஒற்றிநகர் 

திகழுஞ் செல்வத் தியாகர்அவர் 
பூவார் கொன்றைப் புயங்கள்மனம் 

புணரப் புணர வரும்பவனி 
ஓவாக் களிப்போ டகங்குளிர 

உடலங் குளிரக் கண்டலது 
பாவார் குதலைப் பெண்ணேநான் 

பரிந்து நீரும் பருகேனே   
1589
சிற்றம் பலத்தார் ஒற்றிநகர் 

திகழுஞ் செல்வத் தியாகர்அவர் 
உற்றங் குவந்தோர் வினைகளெலாம் 

ஓட நாடி வரும்பவனி 
சுற்றுங் கண்கள் களிகூரத் 

தொழுது கண்ட பின்அலது 
முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் 

முடிக்கோர் மலரும் முடியேனே   
1590
சிந்தைக் கினியார் ஒற்றிநகர் 

திகழுஞ் செல்வத் தியாகர்அவர் 
சந்தத் தடந்தோள் கண்டவர்கள் 

தம்மை விழுங்க வரும்பவனி 
முந்தப் புகுந்து புளகமுடன் 

மூடிக் குளிரக் கண்டலது 
கந்தக் குழல்வாய்ப் பெண்ணே நான் 

கண்ணீர் ஒழியக் காணேனே