1626
வாக்குக் கடங்காப் புகழுடையார் 

வல்லார் ஒற்றி மாநகரார் 
நோக்குக் கடங்கா அழகுடையார் 

நோக்கி என்னை அணைந்திலரே 
ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் 

உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண் 
தேக்கங் குழலாய் என்னடிநான் 

செய்வ தொன்றும் தெரிந்திலனே    
1627
தரையிற் கீறிச் சலந்தரனைச் 

சாய்த்தார் அந்தச் சக்கரமால் 
வரையற் களித்தார் திருஒற்றி 

வாணர் இன்னும் வந்திலரே 
கரையிற் புணர்ந்த நாரைகளைக் 

கண்டேன் கண்ட வுடன்காதல் 
திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் 

செய்வ தொன்றும் தெரிந்திலனே   
1628
பெற்றம் இவரும் பெருமானார் 

பிரமன் அறியாப் பேர்ஒளியாய் 
உற்ற சிவனார் திருஒற்றி 

யூர்வாழ் வுடையார் உற்றிலரே 
எற்றென் றுரைப்பேன் செவிலிஅவள் 

ஏறா மட்டும் ஏறுகின்றாள் 
செற்றம் ஒழியாள் என்னடிநான் 

செய்வ தொன்றும் தெரிந்திலனே    
1629
போக முடையார் பெரும்பற்றப் 

புலியூர் உடையார் போதசிவ 
யோக முடையார் வளர்ஒற்றி 

யூர்வாழ் உடையார் உற்றிலரே 
சோகம் உடையேன் சிறிதேனும் 

துயிலோ அணையா குயில்ஒழியா 
தேகம் அயர்ந்தேன் என்னடிநான் 

செய்வ தொன்றும் தெரிந்திலனே    
1630
தாமப் புயனார் சங்கரனார் 

தாயில் இனியார் தற்பரனார் 
ஓமப் புகைவான் உறும்ஒற்றி 

யூர்வாழ் உடையார் உற்றிலரே 
காமப் பயலோ கணைஎடுத்தான் 

கண்ட மகளீர் பழிதொடுத்தார் 
சேமக் குயிலே என்னடிநான் 

செய்வ தொன்றும் தெரிந்திலனே