1636
ஆழி விடையார் அருளுடையார் 

அளவிட் டறியா அழகுடையார் 
ஊழி வரினும் அழியாத 

ஒற்றித் தலம்வாழ் உத்தமனார் 
வாழி என்பால் வருவாரோ 

வறியேன் வருந்த வாராரோ 
தோழி அனைய குறமடவாய் 

துணிந்தோர் குறிநீ சொல்லுவையே    
1637
அணியார் அடியார்க் கயன்முதலாம் 

அமரர்க் கெல்லாம் அரியர்என்பாம் 
பணியார் ஒற்றிப் பதிஉடையார் 

பரிந்தென் முகந்தான் பார்ப்பாரோ 
தணியாக் காதல் தவிர்ப்பாரோ 

சார்ந்து வரவு தாழ்ப்பாரோ 
குணியா எழில்சேர் குறமடவாய் 

குறிதான் ஒன்றும் கூறுவையே    
1638
பொன்னார் புயத்துப் போர்விடையார் 

புல்லர் மனத்துட் போகாதார் 
ஒன்னார் புரந்தீ உறநகைத்தார் 

ஒற்றி எனும்ஓர் ஊர்அமர்ந்தார் 
என்னா யகனார் எனைமருவல் 

இன்றோ நாளை யோஅறியேன் 
மின்னார் மருங்குல் குறமடவாய் 

விரைந்தோர் குறிநீ விளம்புவையே    
1639
பாலிற் றெளிந்த திருநீற்றர் 

பாவ நாசர் பண்டரங்கர் 
ஆலிற் றெளிய நால்வர்களுக் 

கருளுந் தெருளர் ஒற்றியினார் 
மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் 

மருவிக் கலக்க வருவாரோ 
சேலிற் றெளிகட் குறப்பாவாய் 

தெரிந்தோர் குறிநீ செப்புகவே   
1640
நிருத்தம் பயின்றார் நித்தியனார் 

நேச மனத்தர் நீலகண்டர் 
ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார் 

உம்பர் அறியா என்கணவர் 
பொருத்தம் அறிந்தே புணர்வாரோ 
பொருத்தம் பாரா தணைவாரோ 

வருத்தந் தவிரக் குறப்பாவாய் 

மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே