1656
பூமேல் அவனும் மால்அவனும் 

போற்றி வழுத்தும் பூங்கழலார் 
சேமேல் வருவார் திருஒற்றித் 

தியாகர் அவர்தம் திருப்புயத்தைத் 
தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் 

சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத் 
தாமேல் அழற்பூத் தாழாதென் 

சகியே இனிநான் சகியேனே    
1657
கருணைக் கொருநேர் இல்லாதார் 

கல்லைக் கரைக்கும் கழலடியார் 
அருணைப் பதியார் ஆமாத்தூர் 

அமர்ந்தார் திருவா வடுதுறையார் 
இருணச் சியமா மணிகண்டர் 

எழிலார் ஒற்றி இறைவர்இந்தத் 
தருணத் தின்னும் சேர்ந்திலர்என் 
சகியே இனிநான் சகியேனே    
1658
ஆரா அமுதாய் அன்புடையோர் 

அகத்துள் இனிக்கும் அற்புதனார் 
தீரா வினையும் தீர்த்தருளும் 

தெய்வ மருந்தார் சிற்சபையார் 
பாரார் புகழும் திருஒற்றிப் 

பரமர் தமது தோள் அணையத் 
தாரார் இன்னும் என்செய்கேன் 

சகியே இனிநான் சகியேனே    
1659
துதிசெய் அடியர் தம்பசிக்குச் 

சோறும் இரப்பார் துய்யர்ஒரு 
நதிசெய் சடையார் திருஒற்றி 

நண்ணும் எனது நாயகனார் 
மதிசெய் துயரும் மதன்வலியும் 

மாற்ற இன்னும் வந்திலரே 
சதிசெய் தனரோ என்னடிஎன் 
சகியே இனிநான் சகியேனே    
1660
எங்கள் காழிக் கவுணியரை 

எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர் 
திங்கள் அணியும் செஞ்சடையார் 

தியாகர் திருவாழ் ஒற்றியினார் 
அங்கள் அணிபூந் தார்ப்புயத்தில் 

அணைத்தார் அல்லர் எனைமடவார் 
தங்கள் அலரோ தாழாதென் 

சகியே இனிநான் சகியேனே