1666
பொன்னென் றொளிரும் புரிசடையார் 

புனைநூல் இடையார் புடைஉடையார் 
மன்னென் றுலகம் புகழ்ஒற்றி 

வாணர் பவனி வரக்கண்டேன் 
மின்னென் றிலங்கு மாதரெலாம் 

வேட்கை அடைய விளங்கிநின்ற(து) 
இன்னென் றறியேன் அவரழகை 

என்னென் றுரைப்ப தேந்திழையே  
1667
அள்ளிக் கொடுக்கும் கருணையினார் 

அணிசேர் ஒற்றி ஆலயத்தார் 
வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற 

வள்ளல் பவனி வரக்கண்டேன் 
துள்ளிக் குதித்தென் மனம்அவரைச் 

சூழ்ந்த தின்னும் வந்ததிலை 
எள்ளிக் கணியா அவரழகை 

என்னென் றுரைப்ப தேந்திழையே   
1668
அனத்துப் படிவம் கொண்டயனும் 

அளவா முடியார் வடியாத 
வனத்துச் சடையார் திருஒற்றி 

வாணர் பவனி வரக்கண்டேன் 
மனத்துக் கடங்கா தாகில்அதை 

வாய்கொண் டுரைக்க வசமாமோ 
இனத்துக் குவப்பாம் அவரழகை 

என்னென் றுரைப்ப தேந்திழையே  
1669
கொழுதி அளிதேன் உழுதுண்ணும் 

கொன்றைச் சடையார் கூடலுடை 
வழுதி மருகர் திருஒற்றி 

வாணர் பவனி வரக்கண்டேன் 
பழுதில் அவனாந் திருமாலும் 

படைக்குங் கமலப் பண்ணவனும் 
எழுதி முடியா அவரழகை 

என்னென் றுரைப்ப தேந்திழையே  
1670
புன்னை இதழிப் பொலிசடையார் 
போக யோகம் புரிந்துடையார் 

மன்னும் விடையார் திருஒற்றி 
வாணர் பவனி வரக்கண்டேன் 

உன்னும் உடலம் குளிர்ந்தோங்க 
உவகை பெருக உற்றுநின்ற 

என்னை விழுங்கும் அவரழகை 
என்னென் றுரைப்ப தேந்திழையே