1676
பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார் 
முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர் 
இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ 
உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே   
1677
பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார் 
புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம் 
தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த 
ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே   
1678
அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார் 
தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார் 
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ 
ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே   
1679
எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார் 
வண்டோ லிடும்பூங் கொன்றைஅணி மாலை மார்பர் வஞ்சமிலார் 
தண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம் 
உண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே   
1680
தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார் 
பவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார் 
அவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ 
உவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே