1681
பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார் 
மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில் 
வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ 
உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே   
1682
தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார் 
மிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன் 
துக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான் 
ஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே   
1683
வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார் 
வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து 
வண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ 
உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே   
1684
ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச் 
சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும் 
பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ 
ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே    
1685
அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார் 
வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர் 
கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ 
உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 திருஅருட் பெருமிதம் 
செவிலி கழறல் 
திருவொற்றியூர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்