1686
விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால் 
அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம் 
உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ 
இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே    
1687
கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார் 
திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில் 
பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ 
இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே    
1688
மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர் 
பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ 
கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ 
இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே    
1689
நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர் 
தடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால் 
படங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ 
இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே    
1690
திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர் 
எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால் 
உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ 
இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே