1691
மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர் 
மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே 
ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே 
ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே    
1692
மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர் 
யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே 
ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண் 
ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே   
1693
விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும் 
உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித் 
தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ 
எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே    
1694
நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும் 
ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ 
நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ 
ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே    
1695
உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு 
வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும் 
கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ 
எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 காதற் சிறப்புக் கதுவா மாண்பு 
தலைவி கழற் றெதிர்மறுத்தல் -- திருவொற்றியூர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்