1696
உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் 
அலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும் 
திலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும் 
கலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே   
1697
பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும் 
அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும் 
ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும் 
கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே    
1698
எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும் 
கொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும் 
வல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும் 
கல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே    
1699
என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும் 
அன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும் 
துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும் 
கன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே    
1700
என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும் 
ஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும் 
நன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும் 
கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே