1701
என்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும் 
வன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும் 
புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும் 
கன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே    
1702
வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும் 
தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும் 
ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும் 
காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே    
1703
விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும் 
அமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும் 
நமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும் 
கமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே    
1704
மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும் 
ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும் 
வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும் 
கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே    
1705
போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும் 
ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும் 
தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும் 
கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே