1711
ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை 
வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும் 
சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ 
யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ    
1712
சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார் 
சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான் 
தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல் 
ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ    
1713
வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ் 
தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால் 
ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும் 
இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ    
1714
திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய் 
மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என் 
அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல் 
இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ    
1715
அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே 
நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான் 
இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும் 
இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ