1716
மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார் 
சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர் 
பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற் 
கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ    
1717
மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும் 
ஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என் 
பாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே 
ஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ    
டீயஉம--------------------------------------------------------------------------------


 காதல் மாட்சி 
திருவொற்றியூர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1718
திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை 
மடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து 
படனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் 
உடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே    
1719
தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத் 
துக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே 
பக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் 
ஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே    
1720
தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை 
மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து 
பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் 
ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே