1721
நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண 
நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து 
பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் 
உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே    
1722
நாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி தனைக்காண 
நீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து 
பாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் 
ஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே    
1723
அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண 
இழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து 
பழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் 
ஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே    
1724
திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக் 
கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு 
பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் 
உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே    
1725
கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை 
விடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து 
படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் 
உடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே