1736
மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் 

மதிக்குங் கலைமேல் விழுமென்றேன் 
எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா 

ரெட்டா மெழுத்திங் கெதுவென்றேன் 
உட்டா வகற்று மந்தணர்க 

ளுறையூர் மாதே யுணரென்றார் 
அட்டார் புரங்க ளென்னடியவ் 

வையர் மொழிந்த வருண்மொழியே    
1737
ஒற்றி நகரீர் மனவாசி 

யுடையார்க் கருள்வீர் நீரென்றேன் 
பற்றி யிறுதி தொடங்கியது 

பயிலு மவர்க்கே யருள்வதென்றார் 
மற்றி துணர்கி லேனென்றேன் 

வருந்தே லுணரும் வகைநான்கும் 
அற்றி டென்றா ரென்னடியவ் 

வையர் மொழிந்த வருண்மொழியே    
1738
வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் 

வருந்தா தணைவே னோவென்றேன் 
ஊன்றோ யுடற்கென் றார்தெரிய 

வுரைப்பீ ரென்றே னோவிதுதான் 
சான்றோ ருங்கண் மரபோர்ந்து 

தரித்த பெயர்க்குத் தகாதென்றார் 
ஆன்றோய் விடங்க ரென்னடியவ் 

வையர் மொழிந்த வருண்மொழியே    
1739
தீது தவிர்க்கு மொற்றியுளீர் 

செல்ல லறுப்ப தென்றென்றேன் 
ஈது நமக்குந் தெரியுமென்றா 

ரிறையா மோவிங் கிதுவென்றேன் 
ஓது மடியர் மனக்கங்கு 

லோட்டு மியாமே யுணரென்றார் 
ஆது தெரியே னென்னடியவ் 

வையர் மொழிந்த வருண்மொழியே   
1740
ஒண்கை மழுவோ டனலுடையீ 

ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர் 
வண்கை யொருமை நாதரென்றேன் 

வண்கைப் பன்மை நாதரென்றார் 
எண்க ணடங்கா வதிசயங்கா 

ணென்றேன் பொருளன் றிதற்கென்றார் 
அண்கொ ளணங்கே யென்னடியவ் 

வையர் மொழிந்த வருண்மொழியே