1771
ஒருமா முகனை யொருமாவை 

யூர்வா கனமா யுறநோக்கித் 
திருமான் முதலோர் சிறுமையெலாந் 

தீர்த்தெம் மிருகண் மணியாகிக் 
கருமா லகற்றுங் கணபதியாங் 

கடவு ளடியுங் களித்தவர்பின் 
வருமா கருணைக் கடற்குமர 

வள்ள லடியும் வணங்குவாம்    


பாடாண் திணை 

கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் 

(வினா உத்தரம்) 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1772
திருவார் கமலத் தடம்பணைசூழ் 

செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ் 
மருவார் கொன்றைச் சடைமுடிகொள் 

வள்ள லிவர்க்குப் பலிகொடுநா 
னொருவா தடைந்தே னினிநமக்கிங் 

குதவ வருந்தோ றுன்முலைமே 
லிருவா ரிடுநீ யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1773
தண்ணார் மலரை மதிநதியைத் 

தாங்குஞ் சடையா ரிவர்தமைநா 
னண்ணா லொற்றி யிருந்தவரே 

யைய ரேநீர் யாரென்றே 
னண்ணா ரிடத்து மம்பலத்து 

நடவா தவர்நா மென்றுசொலி 
யெண்ணா தருகே வருகின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1774
பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் 

பிச்சைத் தேவ ரிவர்தமைநான் 
றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ 

தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன் 
மட்டி னொருமூன் றுடனேழு 

மத்தர் தலையீ தென்றுசொலி 
யெட்டி முலையைப் பிடிக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1775
மடையிற் கயல்பா யொற்றிநகர் 

வள்ள லாகு மிவர்தமைநா 
னடையிற் கனிவாற் பணியென்றே 

யருளீ ருரியீ ருடையென்றேன் 
கடையிற் படுமோர் பணியென்றே 

கருதி யுரைத்தே மென்றுரைத்தென் 
னிடையிற் கலையை யுரிகின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ