1781
அடுத்தார்க் கருளு மொற்றிநக 

ரைய ரிவர்தா மிகத்தாகங் 
கடுத்தா மென்றார் கடிதடநீர் 

கண்டீ ரையங் கொளுமென்றேன் 
கொடுத்தாய் கண்ட திலையையங் 

கொள்ளு மிடஞ்சூழ்ந் திடுங்கலையை 
யெடுத்தாற் காண்பே மென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1782
இந்தா ரிதழி யிலங்குசடை 

யேந்த லிவரூ ரொற்றியதாம் 
வந்தார் பெண்ணே யமுதென்றார் 

வரையின் சுதையிங் குண்டென்றே 
னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் 

ணாசை விடுமோ வமுதின்றே 
லெந்தா ரந்தா வென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1783
தன்னந் தனியா யிங்குநிற்குஞ் 

சாமி யிவரூ ரொற்றியதா 
மன்னந் தருவீ ரென்றார்நா 

னழைத்தே னின்னை யன்னமிட 
முன்னம் பசிபோ யிற்றென்றார் 

முன்னின் றகன்றே னிவ்வன்ன 
மின்னந் தருவா யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1784
மாறா வழகோ டிங்குநிற்கும் 

வள்ள லிவரூ ரொற்றியதாம் 
வீறா முணவீ யென்றார்நீர் 

மேவா வுணவிங் குண்டென்றேன் 
கூறா மகிழ்வே கொடுவென்றார் 

கொடுத்தா லிதுதா னன்றென்றே 
யேறா வழக்குத் தொடுக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1785
வண்மை யுடையார் திருவொற்றி 

வாண ரிவர்தாம் பலியென்றா 
ருண்மை யறிவீர் பலியெண்மை 

யுணர்கி லீரென் னுழையென்றேன் 
பெண்மை சிறந்தாய் நின்மனையிற் 

பேசும் பலிக்கென் றடைந்ததுநா 
மெண்மை யுணர்ந்தே யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ