1796
கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் 

கள்வ ரிவரூ ரொற்றியதாம் 
பண்ணின் மொழியாய் நின்பாலோர் 

பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான் 
மண்ணின் மிசையோர் பறவையதா 

வாழ்வாயென்றா ரென்னென்றே 
னெண்ணி யறிநீ யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1797
சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் 

செல்வப் பெருமா னிவர்தமைநா 
னோடார் கரத்தீ ரெண்டோ ள்க 

ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ 
கோடா கோடி முகநூறு 

கோடா கோடிக் களமென்னே 
யீடா யுடையா யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1798
துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் 

தோன்றா லிங்கு நீர்வந்த 
கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் 

கடாதற் குன்பா லெம்முடைமைத் 
தருமம் பெறக்கண் டாமென்றார் 

தருவ லிருந்தா லென்றேனில் 
லிருமந் தரமோ வென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1799
ஒருகை முகத்தோர்க் கையரெனு 

மொற்றித் தேவ ரிவர்தமைநான் 
வருகை யுவந்தீ ரென்றனைநீர் 

மருவி யணைதல் வேண்டுமென்றேன் 
றருகை யுடனே யகங்காரந் 

தனையெம் மடியார் தமைமயக்கை 
யிருகை வளைசிந் தென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1800
திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் 

தேவ ரேயிங் கெதுவேண்டி 
வருத்த மலர்க்கா லுறநடந்து 

வந்தீ ரென்றேன் மாதேநீ 
யருத்தந் தெளிந்தே நிருவாண 

மாகவுன்ற னகத்தருட்க 
ணிருத்த வடைந்தே மென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ