1806
வலந்தங் கியசீ ரொற்றிநகர் 

வள்ள லிவர்தாம் மௌனமொடு 
கலந்திங் கிருந்த வண்டசத்தைக் 

காட்டி மூன்று விரனீட்டி 
நலந்தங் குறப்பின் னடுமுடக்கி 

நண்ணு மிந்த நகத்தொடுவா 
யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1807
தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் 

தேவ ரிவர்வாய் திறவாராய் 
மானார் கரத்தோர் நகந்தெரித்து 

வாளா நின்றார் நீளார்வந் 
தானா ருளத்தோ டியாதென்றேன் 

றங்கைத் தலத்திற் றலையையடி 
யேனா டுறவே காட்டுகின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1808
செச்சை யழகர் திருவொற்றித் 

தேவ ரிவர்வாய் திறவாராய் 
மெச்சு மொருகாற் கரந்தொட்டு 

மீண்டு மிடற்றக் கரம்வைத்தார் 
பிச்ச ரடிகேள் வேண்டுவது 

பேசீ ரென்றேன் றமைக்காட்டி 
யிச்சை யெனையுங் குறிக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1809
மன்றார் நிலையார் திருவொற்றி 

வாண ரிவர்தா மௌனமொடு 
நின்றா ரிருகை யொலியிசைத்தார் 

நிமிர்ந்தார் தவிசி னிலைகுறைத்தார் 
நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார் 

நடித்தா ரியாவு மையமென்றே 
னின்றா மரைக்கை யேந்துகின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1810
வாரா விருந்தாய் வள்ளலிவர் 

வந்தார் மௌன மொடுநின்றார் 
நீரா ரெங்கே யிருப்பதென்றே 

னீண்ட சடையைக் குறிப்பித்தா 
ரூரா வைத்த தெதுவென்றே 

னொண்கை யோடென் னிடத்தினில்வைத் 
தேரார் கரத்தாற் சுட்டுகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ