1821
தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் 

தலத்தி லமர்ந்த சாமிநுங்கை 
யெண்கார் முகமாப் பொன்னென்றே 

னிடையிட் டறித லரிதென்றார் 
மண்கா தலிக்கு மாடென்றேன் 

மதிக்குங் கணைவி லன்றென்றே 
யெண்கா ணகைசெய் தருள்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1822
செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் 

திருமான் முதன்முத் தேவர்கட்கு 
மைகா ணீரென் றேனிதன்மே 

லணங்கே நீயே ழடைதி யென்றார் 
மெய்கா ணதுதா னென்னென்றேன் 

விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே 
யெய்கா ணுறவே நகைக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1823
விண்டு வணங்கு மொற்றியுளீர் 

மென்பூ விருந்தும் வன்பூவில் 
வண்டு விழுந்த தென்றேனெம் 

மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார் 
தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன் 

றோகாய் நாமே தொண்டனென 
வெண்டங் குறவே நகைக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1824
மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் 

மதிக்குங் கலைமேல் விழுமென்றே 
னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா 

மிசைத்தே மென்றா ரெட்டாக 
வுட்டா வுறுமவ் வெழுத்தறிய 

வுரைப்பீ ரென்றே னந்தணரூர்க் 
கிட்டார் நாம மென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1825
ஒற்றி நகரீர் மனவசிதா 

னுடையார்க் கருள்வீர் நீரென்றேன் 
பற்றி யிறுதி தொடங்கியது 

பயிலு மவர்க்கே யருள்வதென்றார் 
மற்றி துணர்கி லேனென்றேன் 

வருந்தே லுள்ள வன்மையெலா 
மெற்றி லுணர்தி யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ