1831
தளிநான் மறையீ ரொற்றிநகர் 

தழைக்க வாழ்வீர் தனிஞான 
வொளிநா வரசை யைந்தெழுத்தா 

லுவரி கடத்தி னீரென்றேன் 
களிநா வலனை யீரெழுத்தாற் 

கடலின் வீழ்த்தி னேமென்றே 
யெளியேற் குவப்பின் மொழிகின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1832
ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ 

ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன் 
றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் 

தருவே மென்றா ரம்மமிகத் 
தேமூன் றினநும் மொழியென்றேன் 

செவ்வா யுறுமுன் னகையென்றே 
யேமூன் றுறவே நகைக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1833
மன்னி விளங்கு மொற்றியுளீர் 

மடவா ரிரக்கும் வகையதுதான் 
முன்னி லொருதா வாமென்றேன் 

முத்தா வெனலே முறையென்றா 
ரென்னி லிதுதா னையமென்றே 

னெமக்குந் தெரியு மெனத்திருவா 
யின்ன லமுத முகுக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1834
வளஞ்சே ரொற்றி யீரெனக்கு 

மாலை யணிவீ ரோவென்றேன் 
குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் 

கோல மனைக்க ணாமகிழ்வா 
லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் 

னுளத்தி லணிந்தே முணரென்றே 
யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1835
வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் 

விளங்கு மலரே விளம்புநெடு மாற்றா ரென்றே னிலைகாணெம் 

மாலை முடிமேற் பாரென்றார் 
சாற்றாச் சலமே யீதென்றேன் 

சடையின் முடிமே லன்றென்றே 
யேற்றா தரவான் மொழிகின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ