1886
கோடா வொற்றி யுடையீர்நுங் 

குலந்தான் யாதோ கூறுமென்றேன் 
வீடார் பிரம குலந்தேவர் 

வேந்தர் குலநல் வினைவசியப் 
பாடார் குலமோர் சக்கரத்தான் 

பள்ளிக் குலமெல் லாமுடையே 
மேடார் குழலா யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1887
நலமா மொற்றி யுடையீர்நீர் 

நல்ல வழக ரானாலுங் 
குலமே துமக்கு மாலையிடக் 

கூடா தென்றே னின்குலம்போ 
லுலகோ துறுநங் குலமொன்றோ 

வோரா யிரத்தெட் டுயர்குலமிங் 
கிலகா நின்ற தென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1888
, மதிலொற் றியினீர் நும்மனையாண் 

மலையின் குலநும் மைந்தருளோர் 
புதல்வர்க் கானைப் பெருங்குலமோர் 

புதல்வர்க் கிசையம் புலிக்குலமா 
மெதிரற் றருள்வீர் நுங்குலமிங் 

கெதுவோ வென்றேன் மனைவியருள் 
ளிதுமற் றொருத்திக் கென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1889
தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர் 

திகழுந் தகரக் காற்குலத்தைப் 
பூமா னிலத்தில் விழைந்துற்றீர் 

புதுமை யிஃதும் புகழென்றே 
னாமா குலத்தி லரைக்குலத்துள் 

ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண் 
டேமாந் தனைநீ யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1890
அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ 

ரகில மறிய மன்றகத்தே 
மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர் 

வனப்பா மென்றே னுலகறியத் 
தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ 

தானுந் தகரத் தலைகொண்டா 
யினஞ்சூ ழழகா மென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ