1941
மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன் 

மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன் 
விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன் 

வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன் 
புண்ணாளா நின்றமன முடையேன் செய்த 

பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக் 
கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக் 

கைவிடில்என் செய்வேனே கடைய னேனே    
1942
தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச் 

சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ 
வௌ;வினைதீர்த் தருள்கின்ற ராம நாம 

வியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில் 
இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க் 

கிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ 
செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய் 

திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே    
1943
வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல 

மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத் 
தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத் 

தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா 
ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங் 

குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ 
கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக் 

காட்டினையே என்னேநின் கருணை ஈதோ    
1944
பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம் 

போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி 
என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ 

என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான் 
பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன் 

பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா 
உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன் 

ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே    
1945
அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன் 

ஆருயிருக் கொருதுணையே அரசே பூவை 
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே 

நெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய 
மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோ ர் 

வாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத் 
திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின் 

திருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே