2071
உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள

உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
கலகநிலை அறியாத காட்சி யாகிக்

கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
இலகுசிதா காசமதாய்ப் பரமா காச

இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
அலகில்அறி வானந்த மாகிச் சச்சி

தானந்த மயமாகி அமர்ந்த தேவே   
2072
உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி

யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
கலகமுறா உபசாந்த நிலைய தாகிக்

களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி
விலகலுறா நிபிடஆ னந்த மாகி

மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர்

இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே ஈவச,  
2073
வித்தாகி முளையாகி விளைவ தாகி

விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்

குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்

சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ

முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே   
2074
வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்

மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்

நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற

முதலாகி மனாதீத முத்தி யாகி
வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்

மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே   
2075
தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்

துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த

சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்

உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி

எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே