2081
அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்

அளவாகி அளவாத அதீத மாகிப்
பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்

பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்

பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்

கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே    
2082
பொன்னாகி மணியாகிப் போக மாகிப்

புறமாகி அகமாகிப் புனித மாகி
மன்னாகி மலையாகிக் கடலு மாகி

மதியாகி ரவியாகி மற்று மாகி
முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி

முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க

வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே   
2083
அரிதாகி அரியதினும் அரிய தாகி

அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்

பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்

கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்

செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே   
2084
உருவாகி உருவினில்உள் உருவ மாகி

உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
அருவாகி அருவினில்உள் அருவ மாகி

அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்

குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
மருவாகி மலராகி வல்லி யாகி

மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே   
2085
சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்

சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி

அவையனைத்தும் அணுகாத அசல மாகி
இகலுறாத் துணையாகித் தனிய தாகி

எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்

ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே