2091
மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும்

வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற

நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக்
கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும்

கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும்
தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும்

தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே    
2092
பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற

பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான

கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்

தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்

நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே   
2093
தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்

திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ

மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற

காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்

சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே   
2094
கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்

கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
காவேமெய் அறிவின்ப மயமே என்றன்

கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்

தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்

பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே   
2095
வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின்

வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில்
தானேயும் புவியேஅப் புவியில் தங்கும்

தாபரமே சங்கமமே சாற்று கின்ற
ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத்

துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற
தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின்

தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே