2106
அளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை

அறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர்
உளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை

ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த
களவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம்

கடந்துநிறை வானசுகக் கடலே அன்பர்
வளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன

வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே   
2107
வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்

மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற
என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும்

இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற
அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்

ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி
இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி

எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே   
2108
தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத்

தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச
எண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன்

இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்
பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப்

பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோ டக்
கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங்

கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே   
2109
சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்

தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான்
ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்

கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்
விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்

விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த

மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே   
2110
சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்

சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற

ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப

நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்

கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே