2111
அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும்

அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும்
நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு

நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம்
தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும்

தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும்
மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி

வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே   
2112
வரம்பழுத்த நெறியேமெய்ந் நெறியில் இன்ப

வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள்
சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச்

சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில்
பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும்

பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்
திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே

தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே   
2113
அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்

கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன

வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்

கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்

சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே   
2114
பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்

பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்

சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்

டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்

செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே   
2115
உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க

உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்

கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்

வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்

சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே