2116
கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று

கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே

காணாமற் காண்கின்ற காட்சியே உள்
அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்

அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்

உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே   
2117
சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்

தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற

பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்

ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற

சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே   
2118
பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்

கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்

தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்

செய்யவல்ல கடவுளே தேவ தேவே   
2119
வான்காணா மறைகாணா மலரோன் காணான்

மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று

நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற

வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்

அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே   
2120
மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி

மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை

அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும்
கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்

கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி
எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்

என்கின்ற அநுபவமே இன்பத் தேவே