2121
பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்

பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்

பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்

ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்

கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே   
2122
மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த

வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்

புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்

கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்

ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே   
2123
ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்

உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்

மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்

தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
அலிவகையல் லாதவகை கடந்து நின்ற

அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே   
2124
பேராய அண்டங்கள் பலவும் பிண்ட

பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
வாராய பலபொருளும் கடலும் மண்ணும்

மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்
ஊராத வான்மீனும் அணுவும் மற்றை

உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்

அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே   
2125
கற்பங்கள் பலகோடி செல்லத் தீய

கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்

புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக

நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்

திருவாளர் உட்கலந்த தேவ தேவே