2126
மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்

மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்

கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
விட்டகன்று கருமமல போதம் யாவும்

விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்

சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே   
2127
உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற

உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற
ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்

வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே
இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்

எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்

கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே   
2128
பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப்

பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி
ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி

இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும்
வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு

மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும்
தேங்குபர மானந்த வெள்ள மேசச்

சிதானந்த அருட்சிவமே தேவே தேவே   
2129
எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்

தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்

பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்

கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன

வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே   
2130
உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்

உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை

வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்

களைவினவ மற்றவையுங் காணேம் என்று
வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற

வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே