2131
பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்

பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்

அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்

திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்

தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே   
2132
அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்

அடுக்கடுக்காய் அமைந்தஉள வறிவோம் ஆங்கே
உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்

உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
எந்தைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ

எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற

முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே   
2133
தோன்றுபர சாக்கிரமும் கண்டோ ம் அந்தச்

சொப்பனமும் கண்டோ ம்மேல் சுழுத்தி கண்டோ ம்
ஆன்றபர துரியநிலை கண்டோ ம் அப்பால்

அதுகண்டோ ம் அப்பாலாம் அதுவும் கண்டோ ம்
ஏன்றஉப சாந்தநிலை கண்டோ ம் அப்பால்

இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று
சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற

தன்மயமே சின்மயமே சகசத் தேவே   
2134
பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப்

பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம்
எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல

எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும்

சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம்
தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத்

தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே   
2135
மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல

வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்

கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும்
கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ

காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம்
பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற

பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே