2136
பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற

பூரணசிற் சிவமென்றும் போதா னந்த
மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும்

வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா

இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை
விதுவென்ற() தண்ணளியால் கலந்து கொண்டு

விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே   
2137
அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்

அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்

கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்

திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்

பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே   
2138
என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்

இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற
அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்

அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்

நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீஎன்
தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்

தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே    
2139
தானாகித் தானல்ல தொன்று மில்லாத்

தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
வானாகி வளியனலாய் நீரு மாகி

மலர் தலைய உலகாகி மற்று மாகித்
தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்

தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற
நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை

நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே   
2140
ஆனேறும் பெருமானே அரசே என்றன்

ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்

செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்

உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி

மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே