2141
செஞ்சடைஎம் பெருமானே சிறுமான் ஏற்ற

செழுங்கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து
மஞ்சடையும் மதிற்றில்லை மணியே ஒற்றி

வளர்மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
அஞ்சடைய வஞ்சியர்மால் அடைய வஞ்சம்

அடையநெடுந் துயரடைய அகன்ற பாவி
நெஞ்சடைய நினைதியோ நினைதி யேல்மெய்ந்

நெறியுடையார் நெஞ்சமர்ந்த நீத னன்றே   
2142
அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்

ஆரமுதே என்னுறவே அரசே இந்த
மன்னுலகில் அடியேனை என்னே துன்ப

வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து

போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ

என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே   
2143
படித்தேன்பொய் உலகியனூல் எந்தாய் நீயே

படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்

உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்

பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே

நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ   
2144
மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை

மயலேறி விருப்பேறி மதத்தி னோடு
பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ

பேயேறி நலிகின்ற பேதை யானேன்
வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல்

மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார்
ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள்

உடையானே இதுதகுமோ உணர்கி லேனே   
2145
மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம்

வல்லஅருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக்
கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும்

கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ
பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்

பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்
துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ 

இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே