2151
கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன்

கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே
எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும்

இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ
பெற்றவளைக் காணாத பிள்ளை போலப்

பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி
இற்றவளைக்() கேள்விடல்போல் விடுதி யேல்யான்

என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே   
2152
அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்

ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்
கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ

குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்
கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக்

கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய்
செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின்

திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே   
2153
கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும்

குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத்
தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன்

தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து
ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன்

உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே
தீம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும்

தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே   
2154
வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி

விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக்
கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்

கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே
உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர்

உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும்
பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோபம்

பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே   
2155
எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட

என்னரசே என்குருவே இறையே இன்று
மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல

மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே
தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய்

தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய்
அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே

அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ