2156
தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்

சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன்
ஏவினைநேர் கண்மடவார் மையற் பேயால்

இடருழந்தும் சலிப்பின்றி என்னே இன்னும்
நாவினைஎன் பால்வருந்திக் கரண்டு கின்ற

நாய்க்கும்நகை தோன்றநின்று நயக்கின் றேனான்
ஆவினைவிட் டெருதுகறந் திடுவான் செல்லும்

அறிவிலிக்கும் அறிவிலியேன் ஆன வாறே   
2157
எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான்

ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே
செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச்

சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ
கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக்

கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம்

மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய்   
2158
அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்

ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன்
இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ

இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே
பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்

பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை
கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக்

குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ   
2159
கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்

காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்
தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு

சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்
பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என்

பேதைமையை என்புகல்வேன் பேய னேனைப்
புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ

புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே   
2160
பொன்னுடையார் இடம்புகவோ அவர்கட் கேற்கப் 

பொய்ம்மொழிகள் புகன்றிடவோ பொதிபோல் இந்தக்
கொன்னுடையா உடல்பருக்கப் பசிக்குச் சோறு

கொடுக்கவோ குளிர்க்காடை கொளவோ வஞ்ச
மின்னிடையார் முடைச்சிறுநீர்க் குழிக்கண் அந்தோ

வீழ்ந்திடவோ தாழ்ந்திளைத்து விழிக்க வோதான்
என்னுடையாய் என்னுடையாய் என்னை இங்கே

எடுத்துவளர்த் தனைஅறியேன் என்சொல் வேனே